133 பணியிடங்களுக்கு குவிந்த பல்லாயிரம் பேர்! என்ன நடந்தது உத்தரகாண்டில்?

tens-of-thousands-of-people-flocked-to-the-territorial-army-recruitment-camp-in-pithoragarh-uttarakhand-nw-azt
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-21 17:14:00

உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் பகுதியில் நடந்த பிராந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிராந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு தேதிகளில் இந்த முகாம் நடக்க இருக்கிறது. இதில் 133 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 18,000க்கும் மேற்பட்டோர் உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் பகுதியில் குவிந்தனர்.

இதனால், அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசல் மட்டுமின்றி, முறையான போக்குவரத்து வசதியும், தங்குமிடம் வசதியையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படவே கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் தடியடியையும் நடத்தியுள்ளனர்.

தங்குமிடம் வசதி இல்லாததால், பலர் சாலையிலும், மலை அடிவாரத்திலும் படுத்து உறங்கியுள்ளனர். மேலும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் இளைஞர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

முன்னதாக பிராந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம், நவம்பர் 26 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் உள்ள தன்பூர் பகுதியில் நடைபெறும் என இராணுவ தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. மேலும், தன்பூரில் நடக்கவிருந்த ஆள்சேர்ப்பு முகாமில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என ராணுவம் தரப்பில் இருந்து கடிதம் ஒன்றும் வெளியாகியிருந்திருக்கிறது. ஆனால், பிறகு அந்த ஆள்சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகர் பகுதியில் நடந்த ஆள்சேர்ப்பு முகாமில் அதிகமானோர் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் பித்தோராகர் பகுதிக்கு செல்ல ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பித்தோராகர் பகுதிக்கு செல்ல வெறும் நான்கு பேருந்து வசதிகள் மட்டுமே இருக்கிறது. இதனால், பேருந்துகளிலும் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் படிக்கட்டில் அமர்ந்தும், பேருந்தின் பின்பக்கம் இருக்கக்கூடிய பொருள்கள் வைக்கக்கூடிய இடத்தில் அமர்ந்தும் சென்ற வீடியோ காட்சிகளும் வைரலாகிவருகிறது.

கடுமையான கூட்ட நெரிசலின் காரணமாக பேருந்துகளில் மோதல் சம்பவங்களும் நடந்ததாக ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக டாக்ஸி மூலம், பித்தோராகர் பகுதிக்கு சென்றதாகவும் அதற்கு 10 நபர்களுக்கு ரூ.10,000 டாக்ஸியில் வசூல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்களுக்கு முறையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. 30 பள்ளிகளில் அவர்கள் தங்குவதற்கான வசதியும், 18 இடங்களில் அவர்களுக்கான உணவுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், போதிய பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next