மிசோரமில் ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - மியான்மரை சேர்ந்த இருவர் கைது
ஐசால்,
மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் மாநில காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் ரூ.86 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மியான்மர் நாட்டை சேர்ந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. முதலில் இந்தியா-மியான்மர் எல்லை அருகே உள்ள தியோ நதிக்கரை அருகே நடந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில், ரூ.85.56 கோடி மதிப்பிலான 28.52 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் போதைப்பொருளை கடத்த முயன்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.39 லட்சம் மதிப்பிலான 52 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.