160 ஆண்டுகளில் HSBC-ன் முதல் பெண் தலைமை அதிகாரியான இந்திய பெண்... யார் இந்த பாம் கவுர்?
HSBC-ன் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக (CFO) நியமிக்கப்பட்டதன் மூலம் பாம் கவுர் சரித்திரம் படைத்துள்ளார். இது 160 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஓர் மிகப்பெரிய வங்கியின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். ஜனவரி 1, 2025 அன்று தனது புதிய பொறுப்பை ஏற்க உள்ள பாம் கவுர், நிதித்துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் பல்கலைக்கழக பட்டதாரியான பாம் கவுர், நிதித்துறையில் எம்பிஏ பட்டம் பெற்றவர் மற்றும் தன்னை திறமையான ஆடிட்டராகவும் நிரூபித்தவர். அவர் ஏப்ரல் 2013இல் ஹெச்எஸ்பிசியில் உள் தணிக்கை குழுவின் தலைவராக சேர்ந்தார் மற்றும் குழுவின் தலைமை, இடர் மற்றும் இணக்க அதிகாரி உள்ளிட்ட பல மூத்த பதவிகளையும் வகித்துள்ளார்.
சிட்டி பேங்க், லாயிட்ஸ் பேங்கிங் குரூப், ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து மற்றும் டச்சு வங்கி போன்ற முக்கிய நிதி நிறுவனங்களில் அவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எச்எஸ்பிசியில் (HSBC) பணிபுரிவதற்கு முன்பு, பாம் கவுர் ஆர்பிஎஸ் (RBS)இல் மறுசீரமைப்பு மற்றும் இடர் பிரிவுக்கான சிஎஃப்ஓ (CFO) மற்றும் சிஓஓ (COO)ஆக பணியாற்றினார், மேலும் அவர் லாயிட்ஸ் பேங்கிங் குழுமத்தில் பண மோசடி எதிர்ப்பு முயற்சிகளுக்கும் தலைமை தாங்கினார்.
ஆடிட் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் அவரது நிபுணத்துவம் எச்எஸ்பிசி-க்குள் அவரை நம்பகமான தலைவராக நிலைநிறுத்தியுள்ளது. பாம் கவுர், தலைமை நிதி அதிகாரியாக (CFO) தனது புதிய பதவியில், வங்கித் துறையின் முக்கியமான காலகட்டத்தில் வங்கியின் நிதி மூலோபாயம் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. அவரது நியமனம் எச்எஸ்பிசியின் பன்முகத்தன்மை மற்றும் அதன் தலைமைப் பதவிக்கு மேலும் வலுசேர்க்கும் என்று நம்பப்படுகிறது.
பாம் கவுரின் வருடாந்திர அடிப்படை சம்பளம் (Annual Base Salary) £803,000 ஆகவும், நிலையான ஊதியம் (Fixed Pay Allowance) £1,085,000 மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவையும் அவரது ஊதியத்தில் அடங்கும். இது தவிர, அவரது செயல்திறனின் அடிப்படையில் அவரது ஊதியத்தை கணிசமாக உயர்த்தவும், விருப்ப ஊதியம் (Variable Pay) பெறவும் பாம் கவுர் தகுதியுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வாழ்க்கை முழுவதும், தற்போதைய வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தொடர்ச்சியான கற்றல் மற்றும் அதற்கேற்ற மாற்றங்களை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை பாம் கவுர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவரது வெற்றி பயணம் நிதித்துறையில் ஆர்வமுள்ள பல நிபுணர்களுக்கு தொடர்ந்து உத்வேகத்தை அளித்து வருகிறது.