மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு டி20 உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடி தீர்த்த இந்தியா

india-celebrated-t20-world-cup-victory-to-the-point-of-envy-of-other-countries
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-05 07:51:00

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் (ஜூன்) 29ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

ஆனால் மகுடம் சூடிய இந்திய அணி வீரர்களால் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இறுதிப்போட்டி நடந்த பார்படோசை புயல் தாக்கியதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் 2 நாட்கள் அங்குள்ள ஓட்டலில் முடங்கினர்.

தாயகம் திரும்பிய வீரர்கள்

நிலைமை சீரானதும் நேற்று முன்தினம் விமான சேவை தொடங்கியது. இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், இந்திய ஊடகத்தினர் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் தாயகம் புறப்பட்டனர்.

டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்களை காண விமான நிலையத்திலும், வெளியிலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அதிகாலை முதலே காத்து கிடந்தனர். கையில் தேசியக்கொடியை ஏந்தியும், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை காண்பித்தும் வெற்றிக்கோஷம் எழுப்பினர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம் செய்தனர்.

பிரதமரிடம் நேரில் வாழ்த்து

அதன் பின்னர் இந்திய வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் 2 பஸ்களில் அங்கிருந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டல் நுழைவு வாயிலில் ரோகித் சர்மாவும், சூர்யகுமாரும் சூப்பராக நடனம் ஆடி கலகலப்பூட்டினர். கேக்கும் வெட்டி கொண்டாடினர்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் 'சாம்பியன்ஸ்' என்ற பிரத்யேக சீருடையை அணிந்தபடி பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பிரதமர் அளித்த விருந்திலும் பங்கேற்றனர்.

மும்பையில் வெற்றி பேரணி

பிரதமர் சந்திப்பை முடித்துக்கொண்டு இந்திய அணியினர் டெல்லியில் இருந்து விமானத்தில் மும்பைக்கு பறந்தனர். அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் திறந்த பஸ்சில் பிரமாண்டமான வெற்றி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு வசதியாக மும்பை கடற்கரை பகுதியில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்திய வீரர்களின் பேரணி மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மும்பை மரைன் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஊர்வலம் தொடங்க தாமதம் ஆனதால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

காலதாமதம் ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் துளி கூட குறையவில்லை. இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள் வெள்ளத்தில் பஸ் மிதந்து வந்தது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், கரகோஷமும் காதை பிளந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் மும்பையே ஸ்தம்பித்து போனது.

ரூ,125 கோடி:

ஒரு மணி நேர ஊர்வலத்துக்கு பிறகு இந்திய வீரர்களின் பஸ் மும்பை வான்கடே ஸ்டேடியத்தை வந்தடைந்தது. ஸ்டேடியம் 3 மணி நேரத்திற்கு முன்பே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இங்கு வீரர்கள் சிறிது நேரம் உலகக் கோப்பையுடன் நடனமாடி குதூகலப்படுத்தினர். அவர்கள் மத்தியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் உணர்வுபூர்வமாக பேசினர்.

அங்கு நடந்த பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரூ,125 கோடிக்கான காசோலையை கிரிக்கெட் வாரியத்தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் வழங்கினர்.

இவ்வாறு ஒரு உலகக்கோப்பை வெற்றியை மற்ற நாடுகள் பொறாமைப்படும் அளவிற்கு இந்தியா கொண்டாடி தீர்த்து மகிழ்ந்துள்ளது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next