விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அனல்பறந்த பிரசாரம் ஓய்ந்தது!

fierce-battle-for-vikravandi-dmk-pmk-and-ntk-in-a-triangular-showdown-vikravandi-by-poll-campaign-comes-to-close-today
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-07-08 22:02:00

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அமைச்சர் உதயநிதி, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி, திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, அந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிமுக, தேமுதிக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து, அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பரப்புரையின் இறுதி நாளில், உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மக்களையும், பாஜகவையும் பார்த்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் ஏற்பட்டுள்ளதால், இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

பணம் கொடுத்தால் வாக்காளர்கள் வாக்களித்துவிடுவார்கள் என்ற ஆணவத்தில் திமுக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கெடார் பகுதியில் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவிற்காக விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் பாமக வழக்கறிஞர் பாலு புகார் அளித்துள்ளார். திமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள 276 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதையொட்டி, பென்சில், பேனா, மை உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next