பூமியை நெருங்கும் பேராபத்து.. இஸ்ரோ தலைவர் விடுத்த முக்கிய எச்சரிக்கை

asteroid-hitting-earth-isro-chief-warned
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-04 19:54:00

பூமியை நெருங்கி வரும் சிறுகோள் தாக்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பூமி மீது விழுந்த ஒரு விண்கல் கடந்த ஜூன் 30, 1908ல் சைபீரியாவின் தொலைதூர இடமான துங்குஸ்காவில் 2,200 சதுர கிலோ மீட்டர் அடர்ந்த காடுகளில் 80 மில்லியன் மரங்களை அழித்தது. 370 மீட்டர் விட்டம் கொண்ட தற்போதைய விண்கல் ஏப்ரல் 13, 2029ல் பூமியை நெருங்கும். மீண்டும் 2036ல் பூமியை நெருங்கும். 10 கி.மீ., அல்லது அதற்கும் அதிகமான விண்கல் தாக்கினால் பேரழிவு ஏற்படும். இதனால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து போகும்.

இத்தகைய ஒரு தாக்கம்தான் டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, உலகம் முழுவதும் இருக்கும் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், விண்கல்லிடம் இருந்து பூமியை பாதுகாக்க தேவையான வேலைகளை செய்து வருகின்றன. அத்துடன், இஸ்ரோவும் இந்த விஷயத்தில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளது.

இது குறித்து பேசியுள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத், “நமது ஆயுட்காலம் 70-80 ஆண்டுகள், நம் வாழ்நாளில் இதுபோன்ற பேரழிவை பார்க்கவில்லை. இது சாத்தியமில்லை என்று நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் பிரபஞ்சத்தின் வரலாற்றைப் பார்த்தால், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கோள்களை நோக்கி சிறுகோள்கள் வருவது மற்றும் தாக்குவது அடிக்கடி நடந்துள்ளது. சிறுகோள் ஒன்று வியாழனைத் தாக்குவதை நான் பார்த்திருக்கிறேன். பூமியில் இது போன்ற நிகழ்வு நடந்தால், நாம் அழிந்துவிடுவோம்” என்றார்.

மேலும், “இவை சாத்தியம் என்பதால், நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் பூமிக்கு இது நடக்கக் கூடாது என்று நாம் விரும்பவில்லை. அனைத்து உயிரினங்களும் இங்கு வாழ வேண்டும் என்று மனிதநேயத்துடன் நாம் விரும்புகிறோம். ஆனால், அதை நம்மால் தடுக்க முடியாது. எனவே மாற்று வழிகளை கண்டு, அதை திசை திருப்பக் கூடிய நடவடிக்கையை எடுக்கலாம். சில சமயங்களில் அது சாத்தியமில்லாமல் இருக்கலாம். எனவே தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, முன்கணிப்புத் திறன்கள், அதை திசை திருப்ப கனமான பொருட்களை அனுப்பும் திறன், கண்காணிப்பு மேம்பாடு மற்றும் பிற நாடுகளுடன் ஒரு நெறிமுறைக்காக கூட்டாக பணிபுரிய வேண்டும்” என்று சோம்நாத் தெரிவித்தார்.

“அச்சுறுத்தல் உறுதியாகும்போது மனிதநேயம் ஒன்று சேர்ந்து அதை செயல்படுத்தும். முன்னனி விண்வெளி நாடாக, நாம் பொறுப்பேற்க வேண்டும். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும் தொழில்நுட்பத் திறன், அதை செய்வதற்கான திறன் மற்றும் பிற நிறுவனங்களுடன் பணிபுரியும் திறன் ஆகியவற்றைத் தயாரித்து மேம்படுத்துவதற்கான பொறுப்பை நாம் எடுக்க வேண்டும்” என்றும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

Trending News
Recent News
Prev
Next