யார் இந்த போலே பாபா? ஹத்ராஸ் துயர சம்பவத்திற்கு காரணமான இந்த சாமியாரின் பின்னணி என்ன?

who-is-this-baba-what-is-the-background-of-this-preacher-responsible-for-uttar-pradesh-hathras-tragedy
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 16:17:00

உத்தரப்பிரதேசத்தில் போலே பாபா என்ற சாமியாரின் காலடி மண்ணை எடுப்பதற்காக லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், தள்ளுமுள்ளுவில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். யார் இந்த போலே பாபா, அவரின் சொற்பொழிவை கேட்க சாரைசாரையாக பெண்கள் படையெடுத்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் அருகே உள்ள பகதூர் நகரைச் சேர்ந்தவர் சூரஜ் பால் சிங். உத்தரப்பிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். 1990களில் ஆக்ராவில் பணியாற்றிக்கொண்டிருந்த போது திடீரென பணியை விட்டார்.

வேலை இல்லாமல் சுற்றிதிரிந்த சூரஜ் பால் சிங், திடீரென தனது பெயரை நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்று மாற்றுக்கொண்டதாகவும் அவரது மனைவி மாதாஸ்ரீ என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

பெயர் மற்றும் புகழாலும் அதனால் கிடைத்த வருமானத்தாலும் மெல்ல மெல்ல போலே பாபாவாக உருமாறிய சூரஜ், கிராமத்தில் உள்ள தனது 18 ஏக்கர்நிலத்தில் பெரிய ஆசிரமம் ஒன்றை கட்டினார்.

தனது ஆன்மிக உரை மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்க தொடங்கிய போலே பாபாவின் புகழ், மாவட்டங்களை கடந்தது. பின்னர் மாநிலங்களை கடந்து, போலே பாபாவின் ஆசிரமத்துக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.

இந்நிலையில், ஹத்ராஸில் பல ஆண்டுகளுக்கு பிறகு பாபா ஆன்மிக சொற்பொழிவு ஆற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஹத்ராஸ் மாவட்டத்தில் இடா நகர் அருகில் உள்ள ரதிபன்பூர் கிராமத்தில் விவசாயநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு 80 ஆயிரம் பேர் கூடுவார்கள் என கூறி போலீசில் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால் திரண்டதோ, சுமார் 3 லட்சம் பேர்.

போலே பாபா உரையாற்றி விட்டு சென்றபோது அவரது வாகனம் சென்ற பாதையில் இருந்த காலைத் தொடவும் காலடி மண்ணை எடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தல் முண்டியடித்து சென்றனர். மற்றொருபுறம், அரங்கைவிட்டு வெளியேறி முயன்றவர்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.

இதில், நிலைதடுமாறி அருகில் இருந்த சேறும் சகதியுமான வாய்க்காலில் ஒருவர் மீது ஒருவராக விழத் தொடங்கினர். மீண்டு எழ முடியாமல், பக்தர்கள் நெரிசலில் சிக்கி மிதிபட்டு தவித்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

இந்த பெரும்துயரத்தின் போது நெரிசலில் சிக்கியவர்களை மீட்க போலீசாருக்கு கரசேவகர்கள் உதவவில்லை என்றும் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதும் உறவுகளை இழந்து கதறும் குடும்பத்தினரின் குமுறல்களாக உள்ளன. மேலும் சிறிய நகரப் பகுதியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் அதிக உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

போலே பாபா போன்ற சாமியார்களை கடவுளாகவே பக்தர்கள் எண்ணி மூடநம்பிக்கைகளுக்கு சிக்கி கொள்வதே இது போன்ற பேரிழப்புகளுக்கு காரணம் என்பதே நிதர்சனம்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next