அதுல் சுபாஷின் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்காவில் பேரணி… ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

rally-demanded-justice-for-atul-subhash-in-usa-times-square-many-participated-abm
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-23 17:15:00

மனைவியால் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்கள் கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போது சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

போலீசார் ஆய்வில் 24 பக்க தற்கொலை கடிதம் மற்றும் 90 நிமிடங்கள் வீடியோ பதிவு உள்ளிட்டவை கிடைத்தன. அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு அலைக்கழித்த சம்பவத்தை அதுல் சுபாஷ் சுட்டிக் காட்டியிருந்தார்.

மேலும் மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் தோறும் 2 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகவும் அதில் தெரிவித்திருந்தார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, தன் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இறப்பதற்கு முந்தைய தினம், இறக்கும் தினம், இறப்பதற்கு சற்று முன் என மூன்று காலங்களாக பிரித்துத் தான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் அட்டவணையாகப் பட்டியல் போட்டு அதை வீட்டின் சுவர் மீது மாட்டி வைத்திருந்தார்.

அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, மாமியார் நிஷா  மற்றும் மைத்துனர் அனுராக் ஆகியோரை பெங்களூரு போலீசார் அரியானாவில் கைது செய்திருந்தனர். இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

அதுல் சுபாஷ் உயிரிழந்த விவகாரத்தில் அவருக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் நியூயார்க்கில் அமைந்துள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் பேரணி நடத்தப்பட்டது. அதுல் சுபாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு அமெரிக்காவிலும் கவனம் பெற்றுள்ளது.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next