நாடு முழுவதும் காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி,
பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தநிலையில் நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்து சுப்ரீம்கோர்ட்டு கவலை தெரிவித்தநிலையில், மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏரா (ERA) லக்னோ மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது லக்னோ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மேலும், தேவைப்பட்டால் மற்ற கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம் என்றும் காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களையும் பொதுப்பிரிவில் சேர்த்து கலந்தாய்வு நடத்தலாம் என்றும் நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.