தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால்... திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்

you-can-wake-up-the-sleeper-but-jayakumar-criticized-dmk
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-23 17:19:00

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு நடந்தாலும், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினரின் எண்ணம் முழுவதும் எம்.ஜி.ஆர். மாளிகையிலேயே இருந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் போதே முழு எண்ணமும் அதிமுக குறித்தே இருக்கின்றது. இதுவே அதிமுக ஆட்சி வரப்போகிறது என்ற பயம் திமுகவிற்கு இப்போதே வந்துவிட்டதற்கான வெளிப்பாடு.

திமுக பங்கு வகித்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமங்களை வழங்கி, கனிம வளங்கள் முறையற்ற வகையில் இயற்கைக்கு மாறாக சுரண்டபட்டதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது , ஆதலால் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்த கனிமவள திருத்த சட்ட விவாதத்தின்போது கனிமங்களுக்கான ஏலத்தை நடத்துவதுதன் முலமாக முறைகேடுகளை தடுக்கவும் ,மத்திய அரசிற்கு வருவாய் கிடைப்பதற்காகவும் மட்டுமே தம்பிதுரை எம்.பி. தனது கருத்தை தெரிவித்தார்.

கனிமவள திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரதமர் மோடியை சந்தித்த போதெல்லாம், மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசாதது ஏன்?. இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா?. இப்படி டங்ஸ்டன் விவகாரத்தில், முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மதுரை மேலூர் மக்களுக்கு எதிராகவே செயல்பட்ட திமுக அரசு, தனது சூழ்ச்சிகளை மறைக்க அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க நினைப்பது அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

மேலும், மக்கள் பிரச்னைகளில் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை, மக்களின் உண்மையான விடியல் ஒளியாக, குரல் ஒலியாக இருந்து ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்பி, ஆளுங்கட்சியின் பணிகளை செய்யவைப்பதே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்ற உண்மையை நீங்கள் உணரவில்லை என்றாலும் கூட , தமிழ்நாட்டின் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர .

கருணாநிதி போட்ட தப்புக் கணக்குகள் தவிடுபொடியானதே தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்கள் மன நிலையை பிரதிபலிப்பதும், வெல்வதும் அதிமுகவின் கணக்கு மட்டுமே. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டு இருக்கும் ஒரே கணக்கு, மக்கள் கணக்கு! மக்களின் எண்ணக் கணக்கை அறிந்த ஒரே இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2026ல் அரியணை ஏறும் நாளில் திமுகவுக்கு இது புரியும். தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால் கும்பகர்ணன் போல தூங்குபவனை எப்படி எழுப்பவது?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next