“எனது குடும்பத்திலுள்ள 140 கோடி மக்களுக்கும்...” - குவைத்தில் தொழிலாளர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேச்சு
குவைத் நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாடு கவுரவித்துள்ளது.
இரண்டு நாட்கள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மன்னர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது 40 வருடங்களுக்கு பிறகு, குவைத் வந்துள்ள இந்திய பிரதமர் தான் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் இந்திய ஆசிரியர்களும், இந்திய மருத்துவர்களும் குவைத் மக்களை வலிமைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். குவைத்தில் உள்ள தலைமை நிர்வாகிகளிடம் தான் பேசும்போது, அவர்கள் இந்தியர்களை பெரிதும் பாராட்டுவதாக பிரதமர் மோடி கூறினார்.
இதையடுத்து குவைத்தில் உள்ள கல்ஃப் ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது அங்கு இருந்த இந்திய கட்டுமான தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். தாங்கள் 8 முதல் 10 மணி நேரம் வேலை பார்ப்பதாக தொழிலாளர்கள் மோடியிடம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, தொழிலாளர்களின் கடின உழைப்பைப் பார்த்து அவர்களைவிட தாம் ஒரு மணி நேரம் அதிகம் வேலை செய்ய விரும்புவதாக பேசினார்.
உங்கள் குடும்பங்களுக்காக நீங்கள் உழைப்பதைப்போல, எனது குடும்பத்தில் உள்ள 140 கோடி மக்களுக்காகவும் தான் உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நட்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருதினை அந்நாடு வழங்குகிறது. இதற்கு முன்னர், இந்த விருதானது அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.