Allu Arjun: பெண் உயிரிழந்தது தெரிந்தும் அல்லு அர்ஜுன் இதை செய்தாரா? - போலீஸார் சொன்ன அதிர்ச்சி தகவல்!
தெலங்கானாவில் அல்லு அர்ஜுனின் ரசிகை, கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரம், நாளுக்கு நாள் பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கைது நடவடிக்கை, அரசியல் எதிர்ப்பு போன்ற விவகாரங்களைத் தாண்டி தற்போது மாணவர் போராட்டமாக வெடித்துள்ளது.
“புஷ்பா-2” திரைப்படம் திரைக்கு வந்த நாள் அன்று ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் மரணம் அடைந்தார். அவருடைய 7 வயது மகன் படுகாயம் அடைந்து மூளை செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அல்லு அர்ஜுன் திடீரென கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, தெலங்கானா சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கூட்ட நெரிசலுக்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், தன்னுடைய புகழ் மற்றும் நற்பெயரை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்தார். இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த தகவலை தெரிவித்தும், அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளிவரவில்லை எனக்கூறி, அதற்காக சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் ஹைதராபாத் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்ததாக ஐதராபாத் போலீசார் 10 நிமிட சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் 4ஆம் தேதி அல்லு அர்ஜுன் உரிய அனுமதியின்றி திரையரங்கிற்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரோடு ஷோவில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் இரவு 09.45 மணிக்கு திரையரங்கிற்கு வந்த நிலையில், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் இரவு 10.45 மணிக்கு தெரிவிக்க சென்ற போது திரையரங்க நிர்வாகம் மற்றும் அவரது பாதுகாவலர்கள் சிக்கடபள்ளி காவல் உதவி ஆணையரை அனுமதிக்க மறுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
தொடர்ந்து அல்லு அர்ஜுனின் மேலாளர் மூலம் சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அவர் திரையரங்கை விட்டு வெளியேற மறுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு வழியாக திரையரங்கிற்குள் சென்று, அவரிடம் நிலவரத்தை கூறியும் அவர் “படம் முடிந்து செல்வதாக” பிடிவாதம் பிடித்ததாகவும் கூறியுள்ளது. வலுகட்டாயமாக நள்ளிரவு 12 மணி அளவில், அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தனது விளக்கத்தில் கூறியுள்ளது.
இந்நிலையில், பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு, அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு போராட்ட குழுவினர், அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும், வீட்டின் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். “ரேவதி குடும்பத்திடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து சென்ற காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கங்களை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் பெயரை குறிப்பிடாமல், திரைப்பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.