இலங்கை ஆட்சி அதிகாரத்தின் முக்கிய கட்டம்! நவம்பர் 14ல் நடக்கப் போவது என்ன?

sri-lankan-parliamentary-election-will-be-held-tomorrow
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-13 19:08:00

இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இலங்கை அதிபராக உள்ள அநுர குமார திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று இலங்கையின் அதிபராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியவை இடைக்கால பிரதமராக நியமித்தார்.

அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 4 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அநுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இலங்கை, அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடு என்றாலும், நாடாளுமன்றத்திற்குத் தான் முக்கியமான அதிகாரங்கள் உள்ளன. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

அங்கு பெரும்பான்மை பெற குறைந்த பட்சம் 113 இடங்களை வெல்ல வேண்டும். 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு பெரும்பான்மை (மெஜாரிட்டி) கிடைக்கும். அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே, அநுர குமார திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மையைப் பெறாவிட்டால், வேறு சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். மேலும், நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் மட்டுமே அதிபரின் கட்டுப்பாட்டில் வருவதால், மற்ற துறைகளில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத சூழல் ஏற்படும்.

இலங்கையின் நிறைவேற்று அதிபர் முறை அமலுக்கு வந்த பிறகு, ஒரு முறை மட்டுமே அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 2001-ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க அதிபராக இருந்த போது, ரணில் விக்ரமசிங்க கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தார்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next