வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக போட்டி?... குஷ்பு சொல்வது என்ன?

actress-kushbhu-to-be-contest-against-priyanka-gandhi-in-wayanad
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-18 09:14:00

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து நடிகை குஷ்புவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதன்பின் வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் கைகொடுத்த வயநாட்டு மக்களை கைவிடக்கூடாது என்பதற்காக தங்கையும் கட்சி பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியை ராகுல் களமிறக்கியுள்ளார்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க காங்கிரஸ் முயற்சிக்கும் வேளையில் வலுவான போட்டியாக கருதி நடிகை குஷ்புவை பாஜக களமிறக்க திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. வயநாடு தொகுதிக்கான பாஜக-வின் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்பு பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுதொடர்பாக பேசிய குஷ்பு, தேர்தல் என்று வந்தாலே இதுபோன்ற வதந்திகள் பரவுகிறது. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் எழுகின்றன. இப்போதும் அதுபோல வதந்தி எழுகிறது என கூறியுள்ளார்.

மேலும், வயநாட்டில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சி மேலிடம் என்னிடம் இதுவரை பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம், கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதற்கு நூறு சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன் எனவும் குஷ்பு கூறியுள்ளார்.

வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோக்கேரி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ள நிலையில், பாஜக-வின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News
Recent News
Prev
Next