ஆந்திராவை மிரட்டும் மழை.. உள்துறை அமைச்சர் போட்ட உத்தரவு!

southern-part-of-andhra-pradhesh-affected-by-heavy-rain
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-16 15:30:00

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வந்தது. அது தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்துவந்தது. இந்நிலையில் நேற்று இரவு அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும், அது மணிக்கு 12 மணி கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அதேசமயம், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்துவருவதால், தெற்கு ஆந்திராவில் மழை பெய்துவருகிறது. மேலும், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயல்சீமா மாவட்டங்களில், திருப்பதி, கர்னூல், நந்தியாலா, ஓங்கோல் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கெல்லாம் தொடர் மழையும் இருந்துவருகிறது. மேலும், மழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் அனிதா வாங்கலப்புடி தெரிவித்துள்ளார்.

மேலும், உள்துறை அமைச்சர் அனிதா வாங்கலப்புடி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி, மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் பேசினார். கனமழை எச்சரிக்கையின் பின்னணியில், சித்தூர், திருப்பதி, கர்னூல், நந்தியாலா, ஓங்கோல், கடப்பா ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களி்ல் விடுமுறையில் இருக்கும் அதிகாரிகளையும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் அனிதா தெரிவித்தார். மேலும், கன மழை எச்சரிக்கையின் காரணமாக மக்கள் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், தேவையற்று வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதவிர, முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு தேவையான மருத்துவ வசதியை வீட்டிற்கே சென்று வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next