நாம் அனைவரும் சகோதரர்கள்... தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை

pope-francis-and-indonesia-imam-call-for-unity-against-religious-violence
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-09-05 16:24:00

ஜகார்த்தா,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு உடல்நல சவால்களுக்கு மத்தியில் போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாகப் போப் பிரான்சிஸ் இந்தோனேசியா சென்றிருக்கிறார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவுக்கு போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது 35 ஆண்டுகளில் முதன் முறையாகும். இதனால் வரலாற்று சிறப்புமிக்க பயணமாக இது கருதப்படுகிறது. இந்தோனேசியா சென்றடைந்த போப் ஆண்டவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்ற போப் பிரான்சிஸ், அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுற்றுப் பயணத்தின் 3-வது நாளான இன்று போப் பிரான்சிஸ் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது போப் பிரான்சிஸ் மற்றும் இஸ்திக்லால் மசூதியின் இமாம் நசருதீன் உமர் இருவரும், மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

மசூதியில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், "ஆழமாகப் பார்த்தால், நம்முடைய வேறுபாடுகளை தாண்டி, நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள், அனைவரும் கடவுளை நோக்கிச் செல்கிறோம் என்பதை அறியலாம். யுத்தங்கள் மற்றும் மோதல்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் தீவிரமான நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். சுற்றுச்சூழல் நெருக்கடி மக்களின் வளர்ச்சிக்கும் சகவாழ்வுக்கும் தடையாக உள்ளது" என்று கூறினார்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next