விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 எப்போது வரும்..? பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து வெளியான அப்டேட்!
சிறு, குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ஒரே தவணையில் வழங்கப்படாமல், ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒருமுறை என 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் ஆண்டுதோறும் பயனடைந்து வருகின்றனர். தற்போது வரை விவசாயிகளுக்கு 17 தவணைகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்நிலையில், 18வது தவணைத் தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் 4 மாதங்களுக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் தவணைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில், 17வது தவணைத் தொகை ஜூன் மாதம் வழங்கப்பட்டது. இதனால், வரும் அக்டோபர் 2024ல் 18வது தவணைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சில விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 18வது தவணைத் தொகை கிடைக்கும் என்று ஏற்கெனவே மத்திய அரசு கூறியிருந்தது. அதாவது, ஆவணப் பதிவேற்றம் மற்றும் நில சரிபார்ப்பு ஆகியவற்றை விவசாயிகள் செய்திருப்பதோடு, e-KYC ஐ ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் செய்திருந்தால் மட்டுமே பிரதமர் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 18வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.