அடுத்தடுத்து மேயர்கள் ராஜினாமா! - பின்னணி என்ன?

coimbatore-mayor-kalpana-ananda-kumar-and-nellai-mayor-saravanan-resigns-their-post
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 18:30:00

தமிழ்நாட்டில் கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ள சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் மொத்தம் உள்ள 100 மாநகராட்சி வார்டுகளில் 96 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவைச் சேர்ந்த கவுன்சிலரான கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் தொடர்ந்து மோதல் போக்குடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்களே மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிகழ்வும் நடந்தது.

இந்நிலையில், மேயர் கல்பனா மீது கட்சியினர் அளித்த புகார்கள் குறித்து அவரை நேரில் அழைத்து திமுக தலைமை விசாரித்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக சென்னையில் இருந்த கல்பனா, இன்று கோவை திரும்பிய நிலையில், மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கோவை மாநராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் கல்பனா வழங்கினார்.

இதையடுத்து, கோவை மாநகராட்சிக்கு புதிய மேயர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கோவை மேயர் கல்பனா தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

கோவை மேயரைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளார். மேயராக சரவணன் பதவியேற்றதிலிருந்து அவருக்கு எதிராக திமுகவின் உறுப்பினர்களே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருந்தனர். மேலும், தொடர்ச்சியாக சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே செயல்பட்டு வந்த நிலையில் சரவணன் ராஜினாமா செய்துள்ளார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next