நீட் விலக்கு, ஒன்றிய அரசு, மாநில உரிமை... யாருடைய குரலாக பேசுகிறார் விஜய்? - அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்!

actor-vijay-opposes-neet-welcomes-tamil-nadus-resolution-against-exam
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 18:12:00

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜயின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜய், மத்திய அரசை ஒன்றியம் என குறிப்பிட்டார். மேலும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது என்றும் விமர்சித்தார். பன்முகத்தன்மை தான் பலம் என்று குறிப்பிட்ட விஜய், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேட்டால் அதன் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விட்டதாகவும் விஜய் கூறினார். நீட் விலக்கு மட்டுமே இதற்கு தீர்வு என்று கூறிய விஜய், நீட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக தெரிவித்தார்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், உடனடியாக சிறப்பு பொதுப்பட்டியலுக்காவது அதனை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாக கூறிய விஜய், மாணவர்கள் அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்றும், கடவுள் ஏதேனும் ஒரு வாய்ப்பை வைத்திருப்பார் எனவும் அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் நீட் ரத்துக்கு எதிராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாக கூறினார்.

அதிமுகவின் நிலைப்பாடும் அதுதான்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் நிலைப்பாடும் அதுதான் என்று கூறினார். மேலும் நீட் தேர்வு வருவதற்கு காரணமே திமுக தான் என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

விஜய் பேசியது தவறு

நீட் தொடர்பான விஜயின் பேச்சு வருந்தத்தக்கது என தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேசிய அவர் “நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் மத்தியில் அதைப் பற்றி விஜய் பேசியது தவறு என கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து மாற்றப்பட்டதாக தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விளக்கம் அளித்தார் .

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next