அடகு வைத்த நகைகளை வெட்டி வெட்டி அபேஸ் செய்த வங்கி ஊழியர்.. சிவகங்கையில் அட்டூழியம்!

sivagangai-gold-cheating-by-bank-staff-public-shocked
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-02 08:18:00

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வங்கியில் அடகு வைத்த நகைகளை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விசாரணையில் சுமார் 80 பேர் புகார்கள் குவிந்துள்ள நிலையில், அதிகாரிகள் திணறிப் போய் உள்ளனர். 

அடகு வைக்கும் போது வளையலாக இருந்த நகை.. அடகு திருப்பும் போது மோதிரமாக மாறிய சம்பவம் தான் வங்கிக்குள் நடந்த கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பத்த வச்ச தங்க சங்கிலி.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட நெக்லஸ்.. பாதியான தாலி சரடு.. காணாமல் போன கொக்கி என ஒவ்வொரு நகையிலும் கட்டிங், வெட்டிங், ஒட்டிங் செய்து கைவரிசை காட்டியுள்ளார் வங்கி ஊழியர் ஒருவர்.

அவசரத் தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் மக்கள் நம்பி அணுகும் ஒரே இடம் வங்கிகள் தான்.   ஆனால் பாதுகாப்பு நிறைந்த வங்கியில் கருப்பு ஆடாக உட்கார்ந்து கொண்டு அடகு நகையில் அட்டூழியம் செய்த சம்பவம் தான் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தான் அந்த வங்கி அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமமக்கள் அனைவருக்கும் ஒரே நம்பிக்கையாக இருந்து வந்த வங்கியில் ஏராளமானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்களில் பலர் தங்களது அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தனர்.

அசலை வட்டியுடன் கட்டி தங்களது நகைகளை திருப்பிய போதுதான் அவர்களுக்கு அதிர்ந்து காத்திருந்தது. 5 சவரன் நகை 4 சவரனாக மாறியிருந்தது.. வளையல் சுருங்கி மோதிரமாக மாறியிருந்தது. நெக்லஸ் வெட்டப்பட்டு ஒட்டுபோடப்பட்டிருந்தது. பல செயின்களில் கொக்கிகளைக் காணவில்லை. தங்கள் நகைக்கு என்ன ஆனது என பதறிப்போன வாடிக்கையாளர்கள், கடந்த ஜூன் 21ம் தேதி வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்த செய்தி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விவகாரம் பெரிதானதையடுத்து வங்கிக்கு தற்போது புதிதாக வந்திருக்கும் மேலாளர் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.

விசாரணையைத் தொடங்கிய வங்கி உயர் அதிகாரிகள் ஆய்வுக்குப் பின் சற்று மிரண்டு போயினர். ஏதோ ஒன்றிரண்டு தவறுகள் நடைபெற்றிருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு அடுத்தடுத்து அடகு நகையில் மோசடி அரங்கேறியிருக்கிறது என்பது தெரிந்ததும் விசாரணையை விரிவு படுத்தினர். வங்கியில் தங்கள் நகைகளை அடகு வைத்திருந்த 2500-க்கும் மேற்பட்ட வாடிக்கையார்களை வரவழைத்து மோசடி அரங்கேறியிருக்கறதா? என அவர்கள் முன்னிலையிலேயே நகைகளைக் காண்பித்து ஆய்வு செய்தனர்.

இதில் பல நபர்களின் நகைகள் வெட்டப்பட்டும் ஒடப்பட்டும் இருப்பது அப்பட்டமாகத் தெரியவந்தது. குறிப்பாக படிப்பறிவு இல்லாத ஏழை எளிய பாமர மக்களின் அடகு நகைகளில் மட்டும் மோசடி அரங்கேறியிருப்பது தெரியவந்தது. வங்கியில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நகைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் அடகு நகைகளில் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் புகார்கள் அடுத்தடுத்து குவிந்த வண்ணம் உள்ளன. இந்த மோசடி சம்பவம் தெரியவந்த மற்ற வாடிக்கையாளர்களும் ஒரே நேரத்தில் வங்கியில் குவிய ஆரம்பித்துள்ளனர். பலர் தங்களது அடகு நகைகளை முழு பணத்தையும் செலுத்தி திருப்பி வருகின்றனர்.

திருப்ப முடியாத வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி பத்திரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக வங்கியில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு வங்கி ஊழியர்கள் அடகு நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, வங்கி மேலாளர் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளர் நாராயணகுமார் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சுமார் 167 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு 11 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் என்றும் புகாரில் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வாடிக்கையாளர்களோ கிலோ கணக்கில் அடகு நகை மோசடி அரங்கேறியிருப்பதாக கூறுகின்றனர். மேலும் நகை மதிப்பீட்டாளர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உரிய முறையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அடகு நகை மோசடி வழக்கில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் தோண்ட தோண்ட பூதாகரமாக வெடித்து கிளம்பும் மோசடி குறித்த தகவல்களால் வங்கி அதிகாரிகளே சற்று திணறித்தான் போயுள்ளனர்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next