இங்கிலாந்தில் பெண் மீது கொடூர தாக்குதல்; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை
லண்டன்,
இங்கிலாந்தில் லண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான பர்வேஸ் பட்டேல் (வயது 34) என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் பயந்து போன அந்த பெண் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து பெருநகர போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீசார் கூறும்போது, பட்டேல், பாலியல் தொழிலாளி ஒருவரை வாடகைக்கு முன்பதிவு செய்து விட்டு, அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை பட்டேல் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், அந்த பெண்ணின் மூக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. காயங்களும், வீக்கங்களும் ஏற்பட்டு உள்ளன.
இதனை காவல் துறையின் துப்பறியும் பிரிவு காவலரான லாய்ட் லீச் தெரிவித்து உள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் சமீபத்தில் நடந்த 3 வார கால தொடர் விசாரணை முடிவில், பட்டேலுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இந்த வழக்கில், பட்டேல் மீது பாலியல் பலாத்கார முயற்சி, கொலை மிரட்டல், உடலுக்கு தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. எனினும், உடலுக்கு தீங்கு விளைவித்தல் பிரிவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவர், மற்ற பிரிவுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.