ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு அபராதம் விதித்த ஐசிசி - காரணம் என்ன?
துபாய்,
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் ஹராரேவில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறக்கிய ஜிம்பாப்வே17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின்போது நடுவருக்கு எதிராக பேசியதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆட்டத்தின் 11வது ஓவரில் நடுவருக்கு எதிராக பேசியதாக குல்புதீனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.