ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
பெய்ரூட்,
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தெற்கு லெபனானில் உள்ள கிராமத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினரிடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை நடந்து வரும் பல்வேறு மோதல்களில் மொத்தம் 792 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.