அமெரிக்க அதிபராக டிரம்ப்... சீனாவிற்கு வைக்கவிருக்கும் செக்... இந்தியாவுக்கு பலனா?
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சீனாவிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும்பட்சத்தில் இந்திய நிறுவனங்கள் நேரடியாக பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவுடனான அந்நாட்டின் அணுகுமுறை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுக் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கங்களைக் ஏற்படுத்தக் கூடியது. ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவி காலத்தில் சீனாவின் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்தார். “டிக்டாக்” மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா, “ByteDance” நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அரசுத் துறையில் பணி செய்பவர்கள் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
அதன்பிறகு, இந்தியாவிலும் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது. இதனால், டிக் டாக் மூலம் பிரபலமடைந்த பலரும் வருத்தமடைந்தனர்.
டிக்டாக் இடத்தை நிரப்ப “ரீல்ஸ்” என்ற வசதியை அமெரிக்காவின் பேஸ்புக் தன்னுடைய நிறுவனமான இன்ஸ்டாகிராம் மூலம் களம் இறக்கியது.
இதேபோன்று, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த டிரம்ப் தடை விதித்தார். இதனால், தனது முதலாவது பதவிக் காலத்தில் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் உருவாக டிரம்ப் வழிவகுத்தார்.
தற்போது இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டிரம்ப், சீன பொருட்களுக்கு 60 சதவிகிதம் வரை வரி விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சீனா தவிர பிற வெளிநாட்டுப் பொருட்களுக்கும் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை வரி விதிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
சீனாவின் முன்னணி கார் நிறுவனங்கள் மெக்சிகோவில் கார் உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில், மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறுவதை தடுக்கத் தவறினால் அந்நிறுவன கார்களுக்கு 200 சதவிகிதம் வரை வரி விதிக்கப் போவதாகவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், உலக விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம் என்றும், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். டிரம்பின் வரி விதிகளை அமல்படுத்தினால், 2028-இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் வரை குறையும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கு இந்திய பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தர நிறுவனமான ‘கேர் எட்ஜ்’ (Care Edge) தெரிவித்துள்ளது.
சர்வதேச நிறுவனங்கள் சீனாவிற்கு மாற்றாக உற்பத்தி இடங்களைக் கருத்தில் கொண்டு, அதன் தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வணிக சூழலை மேம்படுத்தவும் இந்தியாவை தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கே முன்னுரிமை என்ற தீவிரமான கொள்கையை கடைபிடித்து வரும் டிரம்பின் பொருளாதார கொள்கைகள் இந்தியாவிற்கு எந்த விதத்தில் சாதகமாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.