வசூலை அள்ளிய வேட்டையன், தி கோட், அமரன்.. இந்த ஆண்டு அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா?
இந்த ஆண்டு கோலிவுட்டில் வெளிவந்த படங்களில் கருடன், அயலான், மகாராஜா, ராயன், கேப்டன் மில்லர், தி கோட், வேட்டையன், அமரன் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது நடப்பு ஆண்டில் கோலிவுட்டில் வெற்றி பெற்றுள்ள படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்த படம் என்ற அடிப்படையில் லப்பர் பந்து திரைப்படம் முதல் இடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரஜினிகாந்தை பொறுத்தளவில் அது சராசரி படமாக தான் இருந்தது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதே போன்று தி கோட் திரைப்படம் தியேட்டர் ரிலீஸில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலை பெற்ற போதிலும் அதன் தயாரிப்பு, புரமோஷன் மற்றும் இதர செலவுகளை ஒப்பிடும்போது அதனை விடவும் லப்பர் பந்து திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்த லப்பர் பந்து திரைப்படம் சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தியேட்டர் வெளியீட்டில் 40 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலித்துள்ளது.
ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்களை பார்க்கும்போது இந்த ஆண்டு வெளியான படங்களில் லப்பர் பந்து திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.