கமலுக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய் சீமானுக்கு வாழ்த்து - அரசியல் நாகரிகமா?... எதிர்கால திட்டமா?

vijay-not-congratulating-kamal-background-of-congratulating-seeman
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-09 17:48:00

அரசியலில் தன்னை விமர்சித்த சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன விஜய், திரைத்துறையில் மூத்த கலைஞரான கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய், “திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள்” எனப் பேசியதற்கு, விஜயை வார்த்தையால் வறுத்தெடுத்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். “தவெகவின் கொள்கையை, அது கொள்கையே அல்ல.. கூமுட்டை” என்றும், “கருவாட்டு குழம்பா? சாம்பாரா? எதையாவது ஒன்னச் சொல்லு, இல்லன்னா ஒதுங்கி நில்லு” எனவும், தவெகவை சரமாரியாக போட்டு தாக்கிய சீமானுக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னதுதான் எப்புட்றா என்பதைப் போல இருந்தது..

எதிரி எதிரிதான் என்றவரை சகோதரர் என குறிப்பிட்டு “திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்” எனப் பதிவிட்டிருந்தது விஜயின் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.

நவம்பர் 8ஆம் தேதி சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னதெல்லாம் சரிதான். அதற்கு முதல்நாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினாரே.. அது விஜய்க்கு மறந்துவிட்டதா என்பதுதான் அரசியல் அரங்கில் அதிர்வலையை எழுப்பிய கேள்வி.

அதிலும், கட்சி ஆரம்பித்த கையோடு, பிரதமர் நரேந்திர மோடி, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன் என பலரின் பிறந்தநாளுக்கெல்லாம் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன விஜய், ஒரு கட்சித் தலைவர் என்பதையும் தாண்டி, தான் சார்ந்த திரைத்துறையில் 50 ஆண்டுகளாக கோலோச்சும் ஒரு மூத்த கலைஞன் என்ற வகையிலாவது கமலுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்க வேண்டாமா? என்பது பலரின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

அதிலும் விஜய்க்கும் கமலுக்கு வெளிப்படையாக எந்த மோதலும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், விருது மேடைகளில் கமல்ஹாசன் விஜயை பாராட்டியும் பேசியிருக்கிறார்.

விக்கிரவாண்டி மாநாட்டின் போதே யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் அரசியலை தான் செய்யப்போவதில்லை என விஜய் கூறியிருந்தார். அதைக் கடைப்பிடிக்கும் விதமாகவே தன்னை சீமான் விமர்சித்திருந்தாலும் கூட, அவரது பிறந்தநாளை ஒட்டி அரசியல் நாகரிகத்தோடு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றே கருதப்படுகிறது.

“தம்பி.. தம்பி” என உரிமையோடு தோள்மீது கைப்போட்டு பேசிய கமல் பெரியளவில் விஜயை விமர்சித்ததில்லை என்ற நிலையில், “தம்பி.. தம்பி” என பேட்டிக்கொடுத்துவிட்டு, தம்பியை சகட்டு மேனிக்கு போட்டுத்தாக்கிய அண்ணனுக்கு விஜய் வாழ்த்துச் சொன்னால்… சந்தேகம் வரத்தானே செய்யும்.

திராவிட மாடலை விமர்சித்த தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளதால்தான் வாழ்த்து சொல்லாமல் விட்டிருக்கலாம் எனவும் அரசியல் அரங்கில் பேசிக்கொள்கின்றனர்.

அதே வேளையில் தன்னை விமர்சித்த சீமானுக்கு விஜய் வாழ்த்துச் சொன்னது அரசியல் நாகரிகமா? அல்லது எதிர்கால திட்டமா? என்பதை விஜய் தான் விளக்க வேண்டும்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next