8 வயது சிறுமி கற்பழித்து கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி

three-sentenced-to-death-for-raping-killing-8-yr-old-girl-in-mangaluru
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-11-09 15:44:00

மங்களூரு,

எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த மூன்று வடமாநில தொழிலாளர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயசிங் (வயது 30), முகேஷ்சிங் (28), மணீஷ் திர்கி (27) என அடையாளம் காணப்பட்டனர்.

நான்காவது குற்றவாளியான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முனீம் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளார். இவர்கள் 4 பேரும் மங்களூரு ஊரக காவல் எல்லைக்குட்பட்ட திருவாயிலு கிராமத்தில் உள்ள ஓடு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். சிறுமியின் பெற்றோரும் அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

இந்த சூழலில் வீட்டின் அருகே சிறுமி விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர்கள் சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்தனர். அதனை சிறுமி வாங்கினாள். பின்னர் அவர்கள் அனைவரும், நாங்கள் உனது தந்தையின் நண்பர்கள் தான். அவர் உன்னை அழைத்து வர கூறினார் என சிறுமியை அவர்கள் காரில் ஏற்றி சென்றனர். இதையடுத்து காரை அங்குள்ள பாழடைந்த கட்டிடம் அருகே நிறுத்தினர். பின்னர் சிறுமியை 3 பேரும் வலுக்கட்டாயமாக கற்பழித்தனர். இதில், மூச்சுத்திணறி சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இ்ந்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 வாலிபர்களை கைது செய்தனர்.

முன்னதாக சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள் 120 (பி), 366 (ஏ), 376 டிபி, 377, 302 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில், சிறுமியை கற்பழித்து கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஜெயசிங், முகேஷ்சிங், மணீஷ் திர்கி ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையும், தலா ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அரசு வழக்கறிஞர் பத்ரிநாத் நயாரி, "நவம்பர் 21, 2021 அன்று, தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொலைதூரப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டு கழுத்தை நெரித்து கொன்றனர். மங்களூருவில் உள்ள போக்சோ கோர்ட்டு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கிய முதல் வழக்கு இதுவாகும்" என்று அவர் கூறினார்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next