பட்டைய கிளப்பிய சஞ்சு சாம்சன்... 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி

cricket-ind-vs-sa-1st-t20-sanju-samsons-century-makes-india-win-by-61-runs
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-09 11:22:00

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. நேற்று டர்பன் நகரில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது.

தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன், ருத்ரதாண்டவம் ஆடி சதம் விளாசினார். 7 பவுண்டரிகள், 10 சிக்சர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன், 50 பந்துகளில் 107 ரன்களை குவித்தார். மேலும் திலக் வர்மா 33 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் என விளாசியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது.

203 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடிக்க முற்பட்ட தென்னாப்பிரிக்கா அணி முதலில் அடித்து ஆடினாலும், பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக க்ளாசன் 25 ரன்களும், ஜெரால்ட் கோட்ஸி 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், 17.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி வெறும் 141 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரவி பீஷ்னோய் ஆகியோர் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next