லெபனானில் ராக்கெட் தாக்குதல்; இஸ்ரேல் வீரர்கள் பலர் காயம்

rocket-attack-in-lebanon-many-israeli-soldiers-were-injured
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-10-13 23:51:00

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.

லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், பீரங்கிகளை கொண்டும் தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த சூழலில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் பீரங்கிகளை நோக்கி, அதிக அளவிலான ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

இதில், படை வீரர்கள் 2 பேர் பலத்த காயமடைந்தனர். பல வீரர்கள் லேசான மற்றும் மித அளவிலான காயமடைந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், காயமடைந்த வீரர்களை மீட்டு கொண்டு செல்லும்போதும், எதிரிகளின் தாக்குதல் நடந்தது என அதுபற்றிய தகவல் தெரிவிக்கின்றது. அப்போது இஸ்ரேலின் மீட்பு பீரங்கி, ஐ.நா. இடைக்கால படையின் முகாமில் பாதுகாப்பாக இருந்தது. ஆனால், அந்த படையினருக்கு எந்த அச்சுறுத்தலையும் இஸ்ரேல் படையினர் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கின்றது.

இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று காலை பேசும்போது, தெற்கு லெபனானில் இருந்து ஐ.நா. அமைதி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரசை வலியுறுத்தி உள்ளார். இதனால், ஐ.நா. வீரர்கள் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next