“திருவள்ளுவர் பிறந்த தினம் இதுதான் என உத்தரவிட முடியாது” - சென்னை உயர்நீதிமன்றம்!

it-cannot-be-ordered-that-this-is-the-birthday-of-thiruvalluvar-madrass-high-court
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 21:49:00

தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்த்து திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 1935 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்கள், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 600 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலில், வைகாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இவ்வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, திருவள்ளுவரை போற்றும் வகையில் தான், தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், தை 2 ஆம் தேதியை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கவில்லை என்று கூறிய அரசு வழக்கறிஞர், இவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் பிறந்தநாள் எது என்று அறுதியிட்டு கூற எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை, அவரது பிறந்தநாளாக அறிவிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் திருவள்ளுவரின் பிறந்தநாளை கண்டுபிடிக்க நீதிமன்றமே ஆராய்ச்சியில் இறங்கியதாகவும், அது குறித்து தீர்க்கமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். அவற்றுடன், மனுதாரர் சார்ந்த அமைப்பு, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக கொண்டாட எந்த தடையும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next