“வங்கதேசத்தின் பவுலிங் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது” - டெஸ்ட் மேட்ச் குறித்து கவுதம் காம்பீர் நம்பிக்கை!

cricket-india-has-quality-batting-line-up-bangladesh-bowling-will-not-threat-said-gautam-gambhir
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 19:47:00

வங்கதேச பவுலர்களால் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர் இவ்வாறு தெரிவித்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இதையொட்டி இந்திய அணியின் தலைமை பயற்சியாளர் கவுதம் காம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சு இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த காம்பீர், இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் மிகவும் வலுவாக உள்ளது. எந்த நாட்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் எதிர்கொண்டு ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உள்ளனர். எனவே வங்கதேசத்தின் பவுலிங் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது-

அஸ்வின், குல்தீப் இருவரும் முதல் நாளிலிருந்து ஐந்தாம் நாள் வரை சிறப்பாக விளையாடக்கூடியவர்கள், இந்திய மைதானத்தில் இருவரும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள், இவர்களின் பங்கு இந்த போட்டிக்கு முக்கியமானதாக அமையும்.

அனைத்து மூத்த வீரர்களிடம் சுமூகமான நல்ல அணுகுமுறையே உள்ளது. நல்ல கிரிக்கெட்டிற்கு இது மிகவும் முக்கியமான ஒன்று.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்தால் வேகப்பந்துவீச்சாளர்களை பற்றி விமர்சனம் செய்வதில்லை. ஆனால் இந்தியாவில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் முடிந்தால் சுழற்பந்துவீச்சாளர்களையும், மைதானத்தையும் விமர்சிக்கிறோம்.

நாங்கள் எந்த அணிக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் அனைவரையும் மதிப்போம்.

எப்பவும் பேட்ஸ்மேன்களை பற்றியே கேள்வி கேட்கப்படும், பந்துவீச்சாளர்களை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது மகிழ்ச்சியே. பும்ரா, சிராஜ், சமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்துவீச்சாளர்களை பற்றி பேசவைத்துள்ளார்கள். பும்ரா  நல்ல ஃபார்மில் உள்ளார், டி20, ஒருநாள் போட்டிகளில் சாதித்துள்ளார். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம். என்று தெரிவித்தார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next